அனுமதிக்கமாட்டோம் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளது.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எண்ணெய் விநியோகத்தைத் தடுத்தால் ஈரான் இதுவரை கண்டிராத மிக மோசமான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.
ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமேனிக்கு (Mojtaba Khamenei) அந்நாட்டின் பாதுகாப்புப் பிரிவினர் முழுமையான ஆதரவை வழங்கி வருவதாலும், அவர்கள் இப்போதைக்கு பின்வாங்கத் தயாராக இல்லை என்பதாலும் உலகளாவிய நிதிச் சந்தைகளில் திங்கட்கிழமை பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்தே டிரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் இராணுவத்திற்கு அமெரிக்கா பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், தான் ஏற்கனவே குறிப்பிட்ட நான்கு வார காலப்பகுதிக்கு முன்னதாகவே இந்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்வு கூறியுள்ளார். எனினும், இந்த யுத்தத்தில் 'வெற்றி' என்பது எதனைக் குறிக்கிறது என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.
ஈரானின் மதகுருமார்களின் ஆட்சியை வீழ்த்துவதே தமது யுத்த இலக்கு என இஸ்ரேல் கூறுகிறது. ஈரானின் ஏவுகணைத் திறன் மற்றும் அணுசக்தித் திட்டங்களை அழிப்பதே வாஷிங்டனின் நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் பெரும்பாலும் கூறுகின்ற போதிலும், அமெரிக்காவிற்கு அடிபணியும் ஒரு அரசாங்கம் ஈரானில் அமையும் போதே போர் முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரானின் பல பகுதிகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்த வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 1,332 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக ஐநாவுக்கான ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடான கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுக்க முயன்றால், அமெரிக்காவின் தாக்குதல்கள் மிகக் கடுமையாக அதிகரிக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டிரம்ப் மேலும் கூறுகையில்:
"நாங்கள் அவர்களை மிகவும் பலமாகத் தாக்குவோம். அந்தத் தாக்குதலிலிருந்து அவர்களோ அல்லது அவர்களுக்கு உதவும் எவருமோ அந்தப் பிராந்தியத்தில் மீளெழ முடியாதவாறு அது அமையும்" எனத் தெரிவித்தார்.
இதேவேளை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்தப் பிராந்தியத்திலிருந்து எண்ணெய் வெளியேறுவதை அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஈரானிய அரச ஊடகங்களின்படி, "யுத்தத்தின் முடிவைத் தீர்மானிப்பவர்கள் நாங்களே" என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது 'Truth Social' தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்:
"ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தை நிறுத்த ஈரான் ஏதாவது செய்தால், அவர்கள் இதுவரை சந்தித்த தாக்குதல்களை விட இருபது மடங்கு (20 times) பலமான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.


