சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து லெபனானின் சமூக விவகாரங்கள் அமைச்சர் ஹனீன் சையத் (Haneen Sayed) குறிப்பிடுகையில், இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கத்தினால் இதுவரை 560 தற்காலிக தங்குமிடங்கள் திறந்துவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான ஆயத்துல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை முன்னெடுத்தனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தொடுத்துள்ள தாக்குதல்கள் காரணமாகவே இந்த பாரிய இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது.
"யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் எங்களுடையது, அமெரிக்காவினுடையதல்ல"
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான தீர்மானத்தை ஈரானே எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை எப்போது நிறுத்துவது என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் என ஈரான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்கள் இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தார்.
புதிய கடும்போக்குவாத உயர்மட்டத் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்துள்ள இஸ்லாமியக் குடியரசானது (ஈரான்), உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்குத் தடையை ஏற்படுத்தினால், மோதல்கள் மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் டிரம்ப் இதன்போது எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும், இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் தங்களுடையது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
பிராந்தியத்தின் எதிர்காலம் தற்போது டெஹ்ரானின் (Tehran) படைகளின் கைகளிலேயே உள்ளது என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) வலியுறுத்தியுள்ளது.


