இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 சதவீதத்தால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, கடந்த காலங்களில் பலமுறை எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும், நாட்டின் நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
இருப்பினும், இம்முறை எரிபொருள் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஏனைய சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த தலைவர், அதற்கமைய கட்டணத் திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து லலித் சந்திரசிறி பெர்னாண்டோ மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"நித்திரையிலிருந்து எழும் போது திடீரென எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எமது போக்குவரத்து சங்கம் என்ற ரீதியில் கட்டணங்களை 5 சதவீதத்தால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளோம். இதன்படி, ஒரு மாணவருக்கான கட்டணம் 10,000 ரூபாவாக இருந்தால், அது 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.
"எரிபொருள் விலை 22 ரூபாவினால் அதிகரித்துள்ளமையானது போக்குவரத்து துறையில் எமக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விருப்பமில்லாவிட்டாலும் எமக்கு இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனைய சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியே இந்தத் தீர்மானத்தை எடுத்தோம்" என்றார்.
எவ்வாறாயினும், இலங்கையில் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று (09) நள்ளிரவு முதல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அது பேருந்து கட்டண திருத்தத்துக்கு தாக்கம் ஏற்படுத்தாது என, அவ்வாணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரந்த தெரிவித்தார்.
இதன் காரணமாக தற்போதுள்ள பேருந்து கட்டணங்கள் அதேபடி தொடரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 22 ரூபாவாலும், லங்கா சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 24 ரூபாவாலும் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.


