இருப்புகளை (Emergency Oil Stockpiles) விடுவிப்பது தொடர்பில் ஜி7 (G7) நாடுகளிடையே இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான ஜி7 அமைப்பின் நிதி அமைச்சர்களுக்கும், சர்வதேச எரிசக்தி முகவரகத்திற்கும் (IEA) இடையில் இன்று நடைபெற்ற முக்கிய சந்திப்பைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
பாரிய இருப்பு விடுவிப்பு: தற்போதைய மோதல் நிலையால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, சுமார் 300 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்புகளை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்று ரீதியான நடவடிக்கை: இது உண்மையாகும்பட்சத்தில், இது மொத்த அவசரக்கால இருப்பில் நான்கில் ஒரு பங்காகும். அத்துடன், 2022 இல் ரஷ்ய - உக்ரைன் போரின் போது விடுவிக்கப்பட்ட அளவை விட இது இரண்டு மடங்கு அதிகமானதாகும்.
சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் (IEA) நிலைப்பாடு: சந்தை நிலைமை மோசமடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள IEA பணிப்பாளர் பாத்திஹ் பிரோல் (Fatih Birol), சவூதி அரேபியா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுடன் இது குறித்துத் தொடர்ச்சியாக ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
பிரான்ஸ் நிதி அமைச்சரின் கருத்து
சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் நிதி அமைச்சர் ரோலண்ட் லெஸ்குர் (Roland Lescure), எண்ணெய் இருப்புகளை விடுவிப்பதற்கான கட்டத்தை தாங்கள் இன்னும் எட்டவில்லை ("not there yet") எனக் குறிப்பிட்டார்.
"சந்தையை ஸ்திரப்படுத்தத் தேவையான அனைத்துக் கருவிகளையும் பயன்படுத்துவதற்கு நாம் உடன்பட்டுள்ளோம். தேவை ஏற்படின், அவசரக்கால இருப்புகளை விடுவிப்பதும் அதில் ஒரு தெரிவாகும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பாவுக்கு எரிசக்தி வழங்கத் ரஷ்யா தயார்; புட்டின் அறிவிப்பு!
அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். எனினும், ஐரோப்பிய நாடுகள் உட்பட ஏனைய நாடுகளுக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை வழங்கி நிலைமையைத் தணிக்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிகாரிகள் மற்றும் எரிசக்தி துறைசார் தலைவர்கள் முன்னிலையில் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:
ஹோமுஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக முன்னெடுக்கப்படும் எண்ணெய் விநியோகங்கள் போர் காரணமாக முழுமையாக ஸ்தம்பிதமடையும் அபாயம் உள்ளதாக புட்டின் எச்சரித்தார். "ஏற்கனவே எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது" என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு எரிசக்தியை வழங்க ரஷ்யா முன்வந்துள்ள போதிலும், அதற்கு இரு முக்கிய நிபந்தனைகளை அவர் முன்வைத்துள்ளார்:
நீண்டகால உடன்படிக்கைகள் (Long-term contracts) கையெழுத்திடப்பட வேண்டும்.
எரிசக்தி விநியோகத்தில் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
ரஷ்ய ஏற்றுமதியாளர்கள் எப்போதும் "நிலைத்தன்மை வாய்ந்தவர்கள்" எனப் பாராட்டிய அவர், உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ரஷ்யா வகிக்கும் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தார்.
பொருளாதார ரீதியான வாய்ப்புகள்
தற்போது ஏற்பட்டுள்ள மசகு எண்ணெய் விலை அதிகரிப்பானது "தற்காலிகமானது" எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி புட்டின், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் தங்களது கடன்களைச் செலுத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அத்துடன், இந்த விலை உயர்வு ரஷ்யாவின் பொது நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக எரிபொருள் விலை 8% உயர்வு: ஒபெக் வழங்கல் குறைப்பு காரணமாக உலக சந்தையில் பதற்றம்!
அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரின் தாக்கத்தால் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் திங்கள்கிழமை சுமார் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. அமர்வின் ஆரம்பத்தில் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்பட்ட மிக உயர்ந்த நிலையை எட்டிய பின்னர், பின்னர் சிலளவு குறைந்து நிலைபெற்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரென்ட் (Brent) எண்ணெய் பியூச்சர்ஸ் ஒரு பீப்பாய்க்கு 7.21 அமெரிக்க டொலர் (7.8%) உயர்ந்து 99.90 டொலராகவும், அதேவேளை வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் 4.50 டொலர் (5%) உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 95.40 டொலராகவும் பதிவாகியுள்ளது.
பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை குண்டுவீச்சு செய்ததிலிருந்து, Brent எண்ணெய் விலை 65% வரை உயர்ந்துள்ளதுடன் WTI 78% வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானில் கடும்போக்கு ஆதரவாளர்கள் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா காமெனெய் பொறுப்பேற்றதை ஆதரித்து திங்கள்கிழமை பெரும் சக்தி வெளிப்பாட்டை மேற்கொண்டனர். இதனால் மத்திய கிழக்குப் போருக்கு விரைவான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் குறைந்து, உலக சந்தைகளில் பதற்றம் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், மூலோபாய எரிபொருளட கையிருப்புகளில் இருந்து எண்ணெய் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, அதிகரிக்கும் எரிசக்தி விலைகள் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம், மேலும் சந்தையில் லாபம் எடுத்தல் போன்ற காரணங்களால் விலைகள் உச்சத்திலிருந்து சிலளவு குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
சவூதி அராம்கோ உற்பத்தி குறைப்பு
சவூதி அரேபியாவின் அரச எரிபொருள் நிறுவனம் அராம்கோ, தனது இரண்டு எண்ணெய் களங்களில் உற்பத்தியை குறைக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னதாகவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைட் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளும் வழங்கலைக் குறைத்துள்ளன.
இந்நிலையில் உலகின் முக்கியமான கடல் வழிகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை பெரும்பாலும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. உலக எரிபொருள் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகத்தின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி இந்தப் பாதையிலேயே கடந்து செல்கிறது.
எனினும் கிரேக்க நிறுவனம் இயக்கும் ஒரு எண்ணெய் கப்பல் சவுதி கச்சா எரிபொருள் சரக்குடன் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சில வர்த்தக கப்பல்கள் இன்னும் இந்த முக்கிய வழித்தடத்தை பயன்படுத்த முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தரவு ஆய்வு நிறுவனம் Kpler தெரிவிப்பதாவது, ஹோர்முஸ் நீரிணை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டாலும், வளைகுடா நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதி முழுமையான திறனுக்கு திரும்ப 6 முதல் 7 வாரங்கள் வரை ஆகலாம் என்பதாகும்.
அமெரிக்கா அவசர நடவடிக்கைகள் பரிசீலனை
எரிபொருள் விலையை கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூலோபாய எரிபொருள் கையிருப்புகளில் இருந்து வெளியீடு செய்வது, அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது, எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் தலையீடு செய்வது போன்ற விருப்பங்களும் அடங்கும்.
ஆயினும், ஹோர்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டிருந்தால் ஏற்படக்கூடிய வழங்கல் தடையை ஒப்பிடுகையில் இத்தகைய நடவடிக்கைகள் மிகக் குறைந்த தாக்கமே ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், ஈரான் போரின் தாக்கம் காரணமாக உலகளாவிய அளவில் நுகர்வோரும் தொழில்களும் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் அதிக எரிபொருள் விலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


