இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் குறித்து தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள தூதுவர், வடக்குப் பகுதியில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளார்.
தீவிரமடைந்துள்ள வான்வழித் தாக்குதல்கள்
தெற்கு லெபனான் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் வான்வழித் தாக்குதல்களும், இஸ்ரேலின் வடக்குப் பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஏவுகணைத் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாகத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், பின்வரும் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:
ஹைஃபா (Haifa)
நஹாரியா (Nahariya)
அக்கோ (Akko)
கலிலி (Galilee)
அஃபுலா (Afula)
மவுண்ட் கார்மல் (Mount Carmel)
நாசரத் (Nazareth)
திபேரியாஸ் (Tiberias)
லெபனானில் இருந்து முன்னெடுக்கப்படக்கூடிய தாக்குதல்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் இடம்பெறக்கூடிய தூண்டுதல் சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளினால் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு நிலைமை சீரடையும் வரை அத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் மாத்திரம் 9,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், அரச ஊடகங்கள் மற்றும் இலங்கைத் தூதரகம் வழங்கும் ஆலோசனைகளைத் தவறாது பின்பற்றுவது அவசியமாகும்," எனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர உதவித் தொடர்புகள்
ஏதேனும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில், இலவச ஆம்புலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொள்ள 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து தமது இருப்பிடத்தை வழங்க முடியும்.
மேலதிக ஆலோசனைகள் அல்லது அவசர உதவிகளுக்கு, வாரத்தின் ஏழு நாட்களும் இயங்கும் தூதரகத்தின் உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கமான 00972-559305731 ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


