அதன் தாக்கம் பாரியளவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. குறிப்பாக ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் 17 சதவீதத்தால் அதிகரித்து 108 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இப்பிராந்தியத்தின் ஊடான எண்ணெய் விநியோகக் கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக விநியோகத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகிறது.
ஆசியப் பங்குச் சந்தைகள் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதுடன், யூரோ மற்றும் யென் நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றன. ஈரானின் எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் இதுவரை 1,332 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், சவூதி அரேபியா, கட்டார், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளிலுள்ள தனது தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு வாஷிங்டன் உத்தரவிட்டுள்ளது. ஈரானின் பதில் தாக்குதல்கள் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிலைகளை இலக்கு வைத்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
ஈரானின் ஆட்சி மாற்றமும் பிராந்தியப் போரும் இலங்கையைப் போன்ற எரிபொருள் இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளுக்கு பாரிய பொருளாதார சவால்களைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இப்பதற்ற நிலை, சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.


