மாதங்களில் இலங்கையில் மின்சார உற்பத்தியில் தடைகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும், அந்த நிலை நீடித்தால் மின்தடை ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதாரண நிலைமைகளில் மின்சார தேவை முறையே 3030, 3070 மற்றும் 3000 மெகாவாட் அளவிற்கு உயர்ந்தால், ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மின் உற்பத்தி திறனில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
(2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான அதிகபட்ச இரவு நேர மின்சார தேவை 2026 பெப்ரவரி 25ஆம் திகதி 2949 மெகாவாட் ஆகும்).
மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு நிலக்கரி உற்பத்தி அலகு அல்லது ஒரு முக்கிய மின் நிலையம் செயலிழந்தால், குறிப்பாக ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரவு நேர உச்ச மின்சார தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தித் திறன் போதாமை ஏற்படும் கடும் அபாயம் காணப்படுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளை, மின் நிலையத்தை பாதுகாப்பாகவும் நிலையாகவும் இயக்குவதற்காக நோரோச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் உற்பத்தித் திறனை மேலும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், இந்த மின்சார உற்பத்தி பற்றாக்குறை அபாயம் மேலும் அதிகரிக்கும் எனவும் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான Trident Chefar Limited நிறுவனம் இதுவரை வழங்கிய 9 நிலக்கரி கப்பல் சரக்குகளால் நோரோச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், அதன் நேரடி நிதி பாதிப்புகள், ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் விளைவுகள் மற்றும் இடையூறு இல்லாமல் மின்சார விநியோகத்தை தொடர்வதில் உள்ள அபாயங்கள் குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தயாரித்த இந்த அறிக்கை சமீபத்தில் பாராளுமன்றத்தின் அடிக்கட்டு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறை கண்காணிப்பு குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் தரத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக நோரோச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் செயல்பாட்டில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிலக்கரியை பயன்படுத்தும் போது மின் நிலையம் அதன் அதிகபட்ச உற்பத்தித் திறனில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த நிலக்கரி சரக்குகளை கொண்டு வரும் கப்பல்கள் வருவதில் சுமார் மூன்று வாரங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு கவனித்துள்ளது. இந்த தாமதம் தொடர்ந்து நீடித்தால், இந்த பருவகாலத்தில் (மே மாதம் நடுப்பகுதிக்கு முன்) இரண்டு முதல் மூன்று நிலக்கரி சரக்குகளை இறக்க முடியாத அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய வழங்குநரிடமிருந்து கிடைக்க வேண்டிய 25 கப்பல் சரக்குகளும் இந்த பருவத்தில் இறக்கப்பட்டாலும், தற்போதுள்ள நிலக்கரி கையிருப்பு 2026 அக்டோபர் 02 ஆம் திகதி வரை மட்டுமே மின் நிலையத்தை இயக்குவதற்கு போதுமானதாக இருக்கும் எனவும் ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கப்பல் சரக்குகளில் மூன்று சரக்குகள் இறக்க முடியாத நிலை ஏற்பட்டால், நிலக்கரி கையிருப்பு 2026 செப்டம்பர் 10ஆம் திகதி வரை மட்டுமே போதுமானதாக இருக்கும். மேலும், ஐந்து கப்பல் சரக்குகள் இறக்க முடியாத நிலை ஏற்பட்டால், அந்த கையிருப்பு 2026 ஆகஸ்ட் 27ஆம் திகதி வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


