நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளமையினால் உலகளாவிய கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதன் நேரடித் தாக்கத்தினால் இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறைகளும் பாரிய சவால்களை எதிர்நோக்கவுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் 'டெய்லி மிரர்' (Daily Mirror) பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், "தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக காப்புறுதி நிறுவனங்கள் விலகிச் செல்வதால் கப்பல் கட்டணங்கள் ஏற்கனவே சிறிதளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் கடல் மார்க்கங்கள் மாற்றப்படுவதால் கப்பல்கள் வருகை தருவதிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன" என அவர் குறிப்பிட்டார்.
Gard, Skuld, NorthStandard, London P&I Club மற்றும் American Club உள்ளிட்ட முன்னணி காப்புறுதி நிறுவனங்கள், மார்ச் 5ஆம் திகதி முதல் 'போர் இடர் காப்புறுதி' (War Risk Cover) வசதிகளை இரத்து செய்வதாக அறிவித்துள்ளன. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் கடந்த மார்ச் 1ஆம் திகதி அவற்றின் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுவாக கடல்சார் மற்றும் வான்வழி காப்புறுதி ஒப்பந்தங்களில் 'போர் மற்றும் பயங்கரவாதத்தினால்' ஏற்படும் இழப்புகள் உள்ளடக்கப்படுவதில்லை. எனவே, இவ்வாறான சூழலில் 'போர் இடர் காப்புறுதி' என்பது கப்பல் போக்குவரத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.
முறையான காப்புறுதி பாதுகாப்பு இன்றி வர்த்தகக் கப்பல்கள் பயணிக்க முடியாது என்பதுடன், துறைமுக அதிகார சபைகள் மற்றும் வங்கிகளும் அத்தகைய காப்புறுதியை ஒரு கட்டாய நிபந்தனையாகவே கருதுகின்றன.
கடந்த 48 மணிநேரத்தில் போர் இடர் காப்புறுதி பிரீமியக் கட்டணங்கள் கப்பல் பெறுமதியின் 0.2 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, 100 மில்லியன் டொலர் பெறுமதியான ஒரு கப்பலுக்கு, ஒற்றைப் பயணத்திற்கான காப்புறுதிக் கட்டணம் 200,000 டொலரிலிருந்து சுமார் 1 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


