1200 x 80 DMirror

 
 


பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று (22) நிறைவேற்றப்பட்டுள்ளமை உலகத்தை ஏமாற்றும் என என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சாடியுள்ளார்.


பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.


திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதற்கமைய, 51 மேலதிக வாக்குகளால் பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ள வில்லை.

இந்நிலையில், ஆறுமாத கால தற்காலிக ஏற்பாடுகள் என்பது ஒரு நகைப்பிற்குரிய விடயமாக மாறியுள்ளது.  இது அரசியல் ரீதியான சட்டம் என ரணில் விக்ரமசிங்க கூறிய போதும் இது அரசியல் ரீதியானது அல்ல. அரசியல் அமைப்புக்கு முரணாகவே இது கொண்டுவரப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

தவறான ஒரு முயற்சியை ஆரம்பித்து அதுவே நல்ல நகர்வு எனவும் அதற்கான ஆரம்பத்தை கையாண்டுள்ளோம் எனவும் இதனை தொடர்வோம் எனவும் கூறிக்கொண்டுள்ளீர்கள். அதேபோல் உலகத்தை ஏமாற்ற நினைக்கின்றீர்கள். இதில் மறுசீரமைப்பு என்ற சொல்லுக்கான அர்த்தத்தையே மாற்றியுள்ளீர்கள். ஆகவே இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக நாம் எதிர்க்கின்றோம் என்றார்.

”சகல இன மக்களையும் சந்தித்து பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற தெளிவுபடுத்தலை முன்னெடுத்து வருகின்றோம்” எனவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் காணப்படுகின்ற பல குறைபாடுகள் எதனையும் நிவர்த்தி செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் கடிதத்தில் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

எனவே, தமது கட்சி முன்மொழியப்பட்ட திருத்தங்களை முற்றாக நிராகரிப்பதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பூச்சுவேலை மூலம் சீர்படுத்த முடியாது எனவும் இது இல்லாதொழிக்கப்பட்டு இதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப பொதுமக்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை ஆக்கத்திறன் வாய்ந்ததாக சமப்படுத்தும் ஒரு சட்டத்தால் தாபிக்கப்படல் வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான முதல் படியாக, இலங்கை சட்டத்துறையின் பிரசித்திபெற்ற உறுப்பினர்களின் அமைப்பான இலங்கையின் சட்ட ஆணைக்குழுவின் 2016 ஆம் ஆண்டின் பரிந்துரைகளுக்கு இணங்க அவை நிறுவப்பட வேண்டும் என்று குறித்த கடிதத்தில் சஜித் பரிந்துரைத்திருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டு ஆறு மாத காலத்திற்கு தற்காலிக ஏற்பாடுகளாக கொண்டுவரப்பட்டது. ஆனால் இச் சட்டம் இலங்கையின் சட்டப் புத்தகங்களில் 43 வருடங்களாக உள்ளது. இப்போது வரையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாரிய பலவீன தன்மைகளை கொண்டுள்ளது.

இந்தப் பலவீனங்களினால் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ் கட்சிகளும் பல அமைப்புகளும் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஐநாவிலும் இலங்கை நெருக்கடியை சந்தித்தது.

இந்நிலையில் தற்போது, பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை அரசின் சமாதானப்படுத்தும் முயற்சியாகவே உள்ளது. 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி