யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தை யாழ். மாநகர சபையின் கட்டுப்பாட்டில் விடாது,

அதனைக் கைப்பற்றிக்கொள்வதில் கொழும்பு ஆட்சி பீடம் முழு முனைப்பாக இருக்கின்றது.

ஆனால், அதே அளவுக்கு அதை கொழும்பிடமல்ல யாழ்ப்பாண மாநகர சபையிடம்தான் இந்தியா கையளித்தது. அதன் நிர்வாகத்தில் நிரந்தரமாக இருக்கச் செய்வதை உறுதிப்படுத்துவதில், அந்தக் கலாசார மண்டபக் கட்டமைப்பை இன்றைய இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் கட்டமைத்து அன்பளிப்பதில் இந்திய மிகக் கவனமாக இருக்கின்றது.

இந்தக் கலாசார மண்டபக் கட்டமைப்புத் தொகுதி கட்டி முடிக்கப்பட்டு வருடம் முடிவடைந்துவிட்டது. அதைத் திறந்துவைத்துக் கையளிப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் அதைக் கையளிக்க முடியாது என்ற இக்கட்டான நிலைமையில் இந்தியா இருக்கிறது.

இந்தக் கட்டமைப்பு யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான நிலத்திலேயே கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. வடக்கில் மிக உயர்ந்த கட்டமைப்பாகவும் அது மிளிர்கின்றது.

இதனை அன்பளிப்பாக நிர்மாணித்து யாழ். மாநகர சபையிடம் கையளிப்பது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இந்த அன்பளிப்புக் கட்டட வேலையை அத்துணை நிதிச் செலவில் இந்தியா ஆரம்பித்தது.

இப்போது கட்டடம் பூர்த்தியாகிவிட்டது. அதை நிர்வகிக்கும் ஆளணி, அம்பு, நிதி வசதிகள் யாழ். மாநகர சபையிடம் இல்லை. அதனால், அதனை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படையுங்கள் என்று கொழும்பு அழுத்தம் கொடுத்து வருகின்றது. கொழும்பில் தாமரைத் தடாக மண்டபக் கட்டமைப்பை இலங்கை நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கும் கட்டமைப்பைப் போல இதையும் கொழும்பு அரசாங்கத்தினால் கையாளலாம் என்பதே இலங்கை அரசாங்கத்தின் திட்டமாகும். அவ்வாறு இடம்பெற்றால், இக்கட்டமைப்பு யாழ். மாநகர சபையின் கையை விட்டுப் போகும். அதை இந்தியா விரும்பவில்லை.

இது, யாழ். மக்களுக்கான இந்தியாவின் உரிமையுடன் கூடிய நன்கொடை, அன்பளிப்பாகும். காலாதி காலமாக நிமிர்ந்து நின்று யாழ். – இந்திய நட்புறவைப் பறைசாற்றப் போகின்ற ஓர் உணர்வுபூர்வமான வெகுமதியாகும்.

அதனால் என்ன செலவானாலும் இக்கட்டமைப்பு யாழ். மாநகர சபையின் கீழ் இருப்பதையே இந்தியா விரும்புவதாகத் தெரிகின்றது. அதனால், மாநகர சபையிடம் போதிய நிதி, ஆளணி வசதி இல்லாவிட்டால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு அதனை நிர்வகிப்பதற்கான நிதி மற்றும் வசதிகளை நேரடியாகத் தந்துதவும் தாராளத்துக்கு இந்தியா இணங்கியிருக்கிறது. அதற்குள் யாழ். மாநகர சபை தானே நிர்வகிக்கும் நிலைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பாகும்.

அப்படி இருந்தும் அந்தக் கட்டமைப்பைத் தன் பொறுப்பில் கொண்டுவருவதற்கு கொழும்பு ஆட்சி பீடம் விடாமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இக்கட்டடம் தொடர்பான முடிவொன்றை எடுப்பதற்காக, நேற்று முன்தினம் கொழும்பில் ஓர் உயர்மட்டக் கலந்தாலோசனை ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தியத் தூதுவர், இந்தியாவின் யாழ். துணைத் தூதுவர், கொழும்பின் பொறுப்பான மத்திய அமைச்சர், வடக்கு ஆளுநர், யாழ். மாநகர சபை முதல்வர் எனப் பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

அங்கும் இந்தக் கட்டமைப்பை நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்படி கொழும்புத் தரப்பு வற்புறுத்தியுள்ளது. ஆனால், இந்தியா விட்டுக்கொடுக்கவில்லை. ஒப்பந்தப்படி அது மாநகர சபையிடம்தான் ஒப்படைக்கப்படும். அடுத்த ஐந்து வருடங்களுக்கு மாநகர சபை அதை நிர்வகிப்பதற்கான வழிகாட்டல் ஒத்துழைப்பு, நிதிப் பங்களிப்பு, நிர்வாக உதவிகள் போன்றவற்றைத் தொடர்ந்து வாரி வழங்க இந்திய முனைப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது பற்றி தொடர்ந்து ஆராய்வதற்காக, எதிர்வரும் 22ஆம் திகதியன்று மற்றுமொரு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கிடையில், கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு தரப்பு, யாழ். முதல்வருக்கு ஒரு சிறிய அட்வைஸ் கொடுத்துள்ளதாக் தெரியவருகிறது.

“தீர்க்கமான முடிவுகளை எடுத்து, இந்தக் கட்டமைப்பை தொடர்ந்து மாநகர சபையிடம் இருப்பதை உறுதிப்படுத்தாமல் வேறு முடிவுகளுக்கு இணங்கிவிடாதீர்கள். உங்களின் பதவிக்காலம் இன்னும் மூன்று மாதங்கள்கூட இல்லை. அதற்குள் அவசரப்பட்டு ஏதேனும் ஓர் இணக்கத்தைக் கண்டு, நீங்கள் முன்னின்று இந்தக் கட்டமைப்பை நீங்களும் சேர்ந்து திறந்துவைக்க வேண்டும் என்ற அவசரத்துக்காக கண்மூடித்தனமான உடன்பாட்டுக்குப் போய்விடாதீர்கள். அப்படிப் போனால், யாழ். மாநகர சபையின் நிலத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்தக் கட்டடம், யாழ்ப்பாண மக்களிடம் இருந்து தள்ளிப் போய்விடும். ஆகவே, புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுங்கள்” என்றே அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி