தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சேர்ந்தால் மற்றும் எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது நிகழ்ச்சிநிரல் ஒன்றில் சேர்ந்தால் தேசியக் கட்சிகளும் ஜே.வி.பி யும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தினால் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் தேசியக்கட்சிகள் ஜே.வி.பி உள்ளிட்டவை தமது அரசியலை முடுக்கிவிட்டுள்ள நிலையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் உறக்க நிலையில் இருப்பதாக குற்றஞ் சுமத்தப்படுவது குறித்து வினவிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சேர்ந்து ஒற்றுமையாக இயங்காத வரையில் இவ்வாறான நடவடிக்கைகள் கிழக்கில் நடைபெறுவன. கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளை விட தமிழ் அரசியல் தலைவர்களே வேண்டியுள்ளனர்.

கிழக்கு மாகாணப் பிரச்சினைகள் வடமாகாணப் பிரச்சினைகள் போன்றவையல்ல. அவை மாறுபட்டவை. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்த சனப் பரம்பல் அல்ல தற்போது அங்கு இருப்பது. இதனால் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை வளர்ந்துள்ளது.

உரியவாறு சிந்தித்துச் செயலாற்றும் அரசியல் தலைவர்கள் எல்லா இனங்களுக்கிடையேயும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால் அன்றி இன முறுகல் நிலை தொடரவே செய்யும்.

எம்மிடையே போதிய அரசியல் தலைவர்கள் இல்லாமையினால் தான் தேசியக் கட்சிகளையும் ஜே.வி.பி போன்ற கட்சிகளையும் மக்கள் வரவேற்றனர் எனவும் வடக்கில் இது தொடர்ந்தும் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. தேசியக் கட்சிகள் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருவதாக வாக்களித்தவற்றை தற்போது தரமுடியாமல் திண்டாடுகின்றனர்.

எனினும் வட கிழக்கை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றதை நாம் மறத்தலாகாது எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.    

மேலும் தமிழ் மக்கள் கூட்டணியை வலுப்படுத்தி இளைஞர்களிடம் கொடுப்பதற்கு நான் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் தற்கால சமூகத்தில் தன்னலமற்ற மக்கள் சேவையை இலக்காக கொண்ட இளைஞர்கள் இல்லாமையினை காண கூடியதாகவுள்ளது.

தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள். அரசியல் பணக்காரர்களாக வர நினைக்கிறார்கள்.

என்னுடைய வாழ்காலம் என்பது இன்னும் சிறிது காலம் என்பது அனைவருக்கும் தெரியும். 80 வயதுக்கும் மேல் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி நாடாளுமன்ற அங்கத்துவமும் பெறுவது இதுவே முதல் தடவை என என்னை ஒருவர் பாராட்டினார்.

அந்தவகையில் எங்களுடைய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளமை எமக்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளது. அந்த வகையில் இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.           

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி