'இந்த சாபம் இப்போது போதும்' என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்று (16) பிற்பகல் கொழும்பில் நடத்த சமகி ஜன பலவேகயவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போராட்டம் தொடர்பாக பல்வேறு சட்ட சிக்கல்களை அரசு எழுப்பியுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் சமகி ஜன பலவேகய ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையில், இந்த போராட்டத்தில் பங்கேற்க இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொழும்புக்கு பஸ்களில் வரும்  போராட்டக்காரர்களிடம் அசாதாரன கேள்விகளை கேட்டு பொலிசார் அனாவசியமான முறையில் தடுத்து வருவதாக சமூக ஊடகங்களில் வௌியிடப்பட்டுள்ள வீடியோக்களில் இருந்து தெரியவருகின்றது.

 

நீதிமன்றங்களின் இருவேறு கருத்துகள்!

இந்த போராட்டம் நடத்துவதை தடைசெய்யக் கோரி பொலிசாரால் நேற்று விடுக்கப்பட்ட கோரிக்கையை 6 நீதிமன்றங்கள் நிராகரித்த போதிலும் 5 நீதிமன்றங்கள் பொலிசாருக்கு சாதகமாக பதில் அளித்திள்ளன.

போராட்டத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவரான எஸ்.எம். மரைக்கார், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தின் ஊழலை ஒழிப்பதற்காக இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

எவ்வாறாயினும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார சட்டங்களை மீறி கொழும்புக்கு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், திட்டமிட்டபடி இன்று கொழும்பில் போராட்டம் நடத்தப்படும் என சமகி ஜனபலவேகய தெரிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி