தற்போதைய ஜே.வி.பி அரசாங்கம், விவசாயிகளைப் பாதுகாப்போம், நாட்டைக் கட்டியெழுப்புவோம் என வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், இன்று
நாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து பொம்மை அரசாங்கமாகவே இருந்து வருகின்றது” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு உரிய நேரத்திற்கு உரம் கிடைத்தபாடில்லை. அவர்களின் அறுவடைகளுக்கு நியாயமான விலையும் கிடைத்தபாடில்லை. விவசாய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், விவசாயிகளைப் பாதுகாப்போம் எனக் கூறிய இந்த அரசாங்கம், பொருளாதார மத்திய நிலையங்களை விற்று, தனியார்மயமாக்கல் திட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
உரம் மற்றும் எரிபொருளை பெற்றுத் தருவோம், ஆடம்பரம் மிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை விவசாயிகளுக்கு உருவாக்கித் தருவோம். நெல்லுக்கு உத்தரவாத நிலையான விலைகளை கட்டளைச் சட்டங்கள் மூலம் சட்டப்பூர்வமாக பெற்றுத் தருவோம் என இந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தன. யானை - மனித மோதலுக்கு தீர்வு காண்போம் என்றும் வாக்குறுதி வழங்கியிருந்தது. இன்று மனித உயிர்களும், யானைகளின் உயிர்களும் கூட இழக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்கிய எந்தவித வாக்குறுதிகளையும் இந்த அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அநுராதபுரம் - தம்புத்தேகம நகரில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தின் கீழ் எத்தனை யானைகள் உயிரிழந்துள்ளன. பயிர் சேதம், உயிர் இழப்பு மற்றும் சொத்து சேதங்கள் என்பனவற்றுக்கு எந்த வேலைத்திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. இன்று விவசாயிகளும் வனவிலங்குகளும் அழிக்கப்பட்டு வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்காது, நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்? இன்றைய நிலவரப்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் காணப்படும் அதி குளிரூட்டி இயந்திரம் செயலிழந்துள்ளது. இலங்கையின் பிரதான வைத்தியசாலையே இந்தப் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இவற்றையே சரியாகச் செய்ய முடியாத அரசாங்கத்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. உப்பைக் கூட சரியாக பெற்றுத் தர முடியாத அரசாங்கமே இன்று ஆட்சியில் இருந்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு பயந்து இந்த அரசாங்கம் அண்மையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது. எரிபொருள் விலை சூத்திரம், மின்சார கட்டண சூத்திரம் போன்றவற்றை நீக்குவோம் என வீராப்பு பேசியிருந்தாலும், இன்று அதைச் செய்வது இவர்களுக்கு சாத்தியமற்ற ஒன்றாக காணப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது அதிக வரிச்சுமையும் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
323 கொள்கலன்களை பரிசோதனையின்றி வெளியேற்றி விட்டு, இப்போது பொய் சொல்லி வருகின்றனர். நாட்டில் எங்குமே பிரச்சினைகள் காணப்படுகின்றன. 323 கொள்கலன்களை சட்டவிரோதமாக விடுவித்து விட்டு, இப்போது நாட்டிற்கு பொய்யையும், பொய்யான பன (பிரசங்கத்தையும்) சொல்லி வருகின்றனர்.
பாடசாலை கட்டமைப்பையே அழிக்கும் கல்விச் சீர்திருத்தங்களைக் கூட இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நாசகார கொள்கைகளுக்கு எதிராக நாம் முன்நிற்போம். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவம் வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களுக்காக நாம் முன்நிற்போம். தற்போதைய ஜே.வி.பி அரசாங்கம் விவசாயிகளைப் பாதுகாப்போம், நாட்டைக் கட்டியெழுப்புவோம் என வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், இன்று நாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து பொம்மை அரசாங்கமாகவே இருந்து வருகின்றது. மக்களின் வாழ்க்கையை அழித்து, அவர்களை படுகுழியின் பால் இழுத்துச் செல்லும் இந்த மக்கள் விரோத செயல்களை நாம் எதிர்ப்போம். இன்றும் கூட, பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கும் கூட பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு நான் அஞ்சப்போவதில்லை. மக்களுக்காக என்னால் இயன்றவரைப் போராடி, எனது உச்சக்கட்ட கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.