சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாகத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா
சாவித்திரி போல்ராஜ், குழந்தைகளை அனாதைகளாகவோ அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ ஆக்காமல், பொறுப்புடன் செயல்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்தார்.
இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
"18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல், எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க அரசாங்கமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
“கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த தெளிவான புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அதற்கான முழுப் பொறுப்பு ஒரு பெண்ணின் மீது மட்டும் விழுவதில்லை. அனாதையாகவோ அல்லது கைவிடப்பட்டவர்களாகவோ சமூகத்தில் விடப்படும் குழந்தைகள், சமூக களங்கத்தையும் பாவத்தையும், சாபத்தையும் சுமக்க நேரிடுகிறது.
“எனவே, உறவு வைத்திருக்கலாம், ஆனால் பொறுப்பான குடும்ப உறவு இல்லாமல் குழந்தை பெறுவது சாத்தியமில்லை என்றால், கர்ப்பத்தைத் தடுக்க அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும். கரு உருவான பிறகு அதை அழிப்பது குற்றவியல் கொலையாகும். ஆகவே, குழந்தைகளை அனாதைகளாகவோ அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ ஆக்காமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
“இதேவேளை, பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரத்தைச் சேர்ப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள” என, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.